சமீபத்தில் டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதும் இந்த பேச்சு வார்த்தையின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமித்ஷாவை சந்தித்தபோது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலைக்கும் தங்களுக்கும் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்றும் அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திடீரென பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான எஸ்ஆர் சேகர் அதிமுகவுக்கு வசீகரம் மற்றும் சரியான தலைமை தற்போது இல்லை என்று விமர்சனம் செய்திருந்தார்.
இந்த விமர்சனத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுகவினர் சந்திப்பை பாஜக நிர்வாகிகள் விமர்சனம் செய்ததற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவை பாஜக நிர்வாகிகள் விமர்சிப்பதற்கு அண்ணாமலை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அதிமுகவுக்கு எதிராக பாஜக வினையாற்றினால், நாங்கள் எதிர்வினை ஆற்ற தயாராக இருக்கிறோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.