Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடிப் பெருக்கை முன்னிட்டு, மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

ஆடிப் பெருக்கை முன்னிட்டு, மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
, திங்கள், 28 ஜூலை 2014 (12:55 IST)
ஆடிப் பெருக்கு விழாவினைச் சிறப்பாகக் கொண்டாட, மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக வினாடிக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு:
 
விவசாயம் செழிக்க வேண்டி, காவேரி அன்னைக்கு மலர் தூவி வணங்கும் விழா எனப்படும் ஆடிப்பெருக்கு விழா, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 
 
அந்த வகையில், 3.8.2014 அன்று வருகின்ற ஆடிப் பெருக்கு விழாவினைத் தமிழக மக்கள் சீரோடும், சிறப்போடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடும் வண்ணம், மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று காவேரி பகுதி மக்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும் எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. 
 
தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு, மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீர் வரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, காவேரிப் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் ஆடிப் பெருக்கினை கொண்டாடும் வகையில், 27.7.2014 முதல் 3.8.2014 வரை மேட்டூர் அணையிலிருந்து, தற்போது குடிநீருக்காகத் திறந்துவிடப்பட்டுள்ள 800 கன அடி நீருடன், கூடுதலாக வினாடிக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil