விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி பாமக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஜெயலலிதா புகைப்படம் இடம்பெற்றிருந்த நிலையில், இது சந்தர்ப்பவாத அரசியலாக தான் கருத முடியும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகியான அன்புமணியும், நாம் தமிழர் சார்பில் அபிநயாவும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுகவும், தேமுதிகவும் புறக்கணித்து உள்ளன.
இரண்டு கட்சிகளின் வாக்குகளை பெற நாம் தமிழர் கட்சியும், பாமகவும் தீவிரம் காட்டி வருகின்றன. தங்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பரப்புரையின் போது சீமான் பேசி உள்ளார். அதேபோல் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுகவின் ஆதரவை நேரடியாக கோரியுள்ளார்.
முன்னதாக அவருடைய பிரச்சார மேடையில் இடம் பெற்றிருந்த பேனரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அடையாளமாக மோடியுடன் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. மேலும் அந்த பேனரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக புறக்கணித்து விட்டதாகவும், ஆனால் அதிமுக கூட்டணி இல்லாத பாமக மேடையில் ஜெயலலிதா புகைப்படம் வைப்பது என்பது செய்யக்கூடாத ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.
இது சந்தர்ப்பவாத அரசியல் நோக்கமாகத்தான் இருக்கும் என்றும் அதேநேரம் படத்தை போடாதீர்கள் என்று நாங்கள் சொல்ல முடியாது என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.