கடலூரை சேர்ந்த பெற்றோர் ஒருவர் தங்கள் 10 வயது மகனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கில் மருத்துவ அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி கண்ணீர் விட்ட நிகழ்ச்சி நீதிமன்றம் முழுவதையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது
கடலூரை சேர்ந்த திருமேனி என்பவரின் 10 வயது மகனால் பேச முடியாது. மேலும் அடிக்கடி வலிப்பு, மூளை பாதிப்பு போன்ற பிரச்சனையும் உண்டு. தையல் தொழில் செய்யும் திருமேனியால் தனது மகனுக்கு வைத்தியம் பார்க்கும் அளவுக்கு வசதியில்லை. அப்படியே வைத்தியம் பார்த்தாலும் குணமாக நீண்ட காலம் ஆகும் என்றும் நாள் ஒன்றுக்கு சுமார் 20 முறை வலிப்பு வரும் தங்கள் மகனின் கஷ்டத்தை தங்களால் பார்க்க முடியவில்லை என்றும் எனவே தங்கள் மகனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்தார்.
திருமேனியின் மனுவையும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த மருத்துவ அறிக்கையையும் படித்து பார்த்த நீதிபதி கிருபாகரன் கண்கள் கலங்கி கண்ணீர் வெளியே வந்தது. சக நீதிபதி பாஸ்கரன் என்பவரும் சோகத்தால் பெரும் மனவருத்தத்தில் இருந்தாஅர்.
பின்னர் பாதிக்கப்பட்ட சிறுவனின் சிகிச்சைக்கு மத்திய, மாநில அரசுகள் ஏன் உதவி செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை ஒத்தி வைத்தனர்.