கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து வாந்தி, மயக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் அங்கு சாராயம் குடித்த 6 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து மேலும் சாராயம் குடித்த 80க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் புதுச்சேரி ஜிப்மர், கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்திருந்தது.
இந்நிலையில் தற்போது காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர்கள் கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட காலம் கழித்து தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.