தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் எப்போது உறுதி செய்யப்போகிறோம்? என கமல் கேள்வி.
சாத்தூர் அருகே அச்சங்குலத்தில் தனியாருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை செயல்படுகிறது. இந்நிலையில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இத்தகவலறிந்த சாத்தூர் மற்றும் ஏழாயிரம் பண்னை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படுகாயமடைந்தவர்களை சாத்தூர் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு 19 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5 தனிப்படையினர் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
இதனிடையே கமல் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், அன்றாடம் செத்துப் பிழைக்கும் தொழிலாகத்தான் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வு இருந்தது. இப்போதோ 19 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலரும் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் எப்போது உறுதி செய்யப்போகிறோம்? உயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரச்சார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது. உடனடி நடவடிக்கைகள் தேவை என தெரிவித்துள்ளார்.