ஒரே நாடு.. ஒரே சட்டம் என நிறைய “ஒரே” சமாச்சாரங்களை கொண்டு வருவதால் சர்வாதிகாரம் தலைதூக்கும் என கமல்ஹாசன் ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நாள் முதலாக இந்திய அரசியல் சூழலில் நடைபெறும் மாற்றங்கள் குறித்து அவ்வபோது தனது கருத்துகளை ட்விட்டர் வாயிலாக தெரிவித்து வருகிறார் மநீம தலைவர் கமல்ஹாசன். ஆரம்பத்தில் அவரது ட்விட்டர் பதிவுகள் புரியாத வகையில் சொற்கள் அமைத்து எழுதப்பட்டதால் பலரும் அதை மீம் மெட்டீரியலாக்கிய நிலையில், பின்னர் தனது கருத்துகளை புரியும்படி சுருக்கமாக பதிவிட தொடங்கினார்.
இந்நிலையில் தற்போது மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேசன் போன்ற திட்டங்களை கொண்டு வருவது குறித்து பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே இந்தி, ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா எனும் வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை ஒரே பிரதமர். எங்கெல்லாம் ஒரே வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுத்து விடும் என்பதே வரலாறு.” என கூறியுள்ளார்.
மேலும் “சம நீதியும், சமூக நீதியும் இல்லாத, ஏற்றத்தாழ்வு சமூகத்தில் ஒரே என்று சொல்வதே பெரும் அநீதி!” என்றும் கூறியுள்ளார்.