சிதம்பரத்தில் ஹெல்மெட் அணிந்து சென்ற குடும்பஸ்தர் ஒருவருக்கு அபராதம் விதித்தது தொடர்பாக, சம்பந்தபட்ட காவலர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு சிதம்பரத்தில் ஒருவர் தன் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளோடு பைக்கில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அவரை வழிமறித்து நிறுத்திய இரண்டு போலீஸ்காரர்கள் அவருக்கு அபராதம் விதித்திருக்கிறார்கள். அவர் ஹெல்மெட் அணிந்திருந்தும், தேவையான ஆவணங்களை வைத்திருந்தும் ஏன் அபராதம் விதிக்கிறீர்கள் என கேட்டிருக்கிறார்.
காவலர்களோ பைக்கில் இரண்டு பேர் மட்டும்தான் செல்ல வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். அதற்காக குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டா செல்ல முடியும் என அந்த நபர் கேட்க விவாதம் பெரிதானது. காவலர்கள் அவரிடம் பேசியதை அவர் செல்போனில் படம்பிடித்திருக்கிறார்.
அது இணையத்தில் பரவ, இதுகுறித்து அறிந்த சிதம்பரம் மாவட்ட காவல்துறை அபராதம் விதித்த காவலர்கள் வேல்முருகன் மற்றும் சார்லஸை ஆயுதப்படை பயிற்சியகத்துக்கு பணியிடை மாற்றம் செய்துள்ளது.