சிறையில் உள்ள சசிகலா விடுதலையானால் அதிமுக, அமமுக என்ற இரு கட்சிகளும் இணையும் என கார்த்திக் சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா அடுத்த ஆண்டில் தேர்தலுக்கு முன்னமே விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சசிகலா விடுதலையான பின்பு தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளன. இந்நிலையில் சசிகலா வெளியே வந்த பிறகு அமமுகவில் இணைவாரா அல்லது அதிமுகவில் தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்நிலையில் சசிகலா விடுதலையாவது குறித்து பேசியுள்ள காங்கிரஸ் பிரமுகர் கார்த்திக் சிதம்பரம் “சசிகலா நிச்சயமாக சிறைவாசம் முடிந்து வெளியே வரத்தான் போகிறார். எனது யூகம் என்னவென்றால் கட்சியின் கீழ்மட்டம் வரை சசிகலா நிர்வாகிகளை நியமித்துள்ளார். அதனால் அவர் வெளியே வந்த பிறகு அதிமுக-அமமுக கட்சிகளை இணைத்து விடுவார். கட்சி தலைமை சசிகலாவிடம் வந்துவிடும் என்றே நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் எது எப்படியிருந்தாலும் அதிமுக அடுத்த தேர்தலில் தோல்வியை தழுவும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.