நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி முழு நேர அரசியல்வாதியாக படிப்படியாக மாறி வருகிறார். துவக்கம் முதலே அவர் திமுகவைதான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். எந்த மேடையில் பேசினாலும் மிகவும் ஆக்ரோஷமாக திமுகவை விமர்சித்து அவர் பேசி வருகிறார். இது திமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் விஜயையும் அவரின் கட்சியினரையும் அவர்கள் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக கரூர் சம்பவத்தில் அவர்கள் விஜயையும் தவெக நிர்வாகிகளையும் மிகவும் மோசமாக விமர்சித்தார்கள். கட்சி நடத்த தெரியவில்லை.. நிர்வாகிகளுக்கு பயிற்சி இல்லை.. போதிய அனுபவம் இல்லை.. விஜய்க்கு மக்கள் மீது அக்கறை இல்லை.. எல்லாரும் ஓடி விட்டார்கள் என்றெல்லாம் அவர்கள் விமர்சித்தார்கள்.
ஒருபக்கம் கூட்டங்களில் பேசும் தவெகவினர் திமுகவின் வாரிசு அரசியலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். விஜயும் கூட வாரிசு அரசியலை வளரவிடக்கூடாது என்பதால்தான் அரசியலுக்கு வந்திருப்பதாக அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். இந்நிலையில் நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட ஒரு விழாவில் பேசிய நடிகர் கருணாஸ் விஜயை விமர்சித்து பேசினார்.
விஜயின் அப்பா ஒரு சினிமா இயக்குனர். அவருடைய அம்மா ஒரு பாடகி.. அவரின் மகனும் இப்போது இயக்குனராக மாறிவிட்டார்.. இவங்க எல்லாரும் ஒரே குடும்பம்தான்.. அவங்க அப்பா டைரக்ட் பண்ணலாம்.. அம்மா பாடலாம்.. பையன் நடிப்பாரு. மகனும் இப்ப டைரக்ட் பண்ணலாம்.. ஆனால் தளபதியோட பையன் உதயநிதி மட்டும் துணை முதலமைச்சர் வரக்கூடாதுன்னா.. இதுல என்னடா நியாயம்?.. கேக்குறவன் கேணையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்லுவியா.. கொஞ்சம் புரிதலோடு பேசு.. அடிப்படையாகவே உங்ககிட்ட தப்பு இருக்கு.. அப்புறம் நீங்க இன்னொருத்தர் மேல தப்பு சொல்றீங்க என்று விஜய் மீது பாய்ந்திருக்கிறார் கருணாஸ்..