ஒவ்வொரு பொங்கல் தினத்தின்போதும் நடிகர் கார்த்தி தனது குடும்பத்தினர்களுடன் சொந்த ஊருக்கு சென்று சொந்தபந்தங்களுடன் பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இன்றும் பொங்கல் விழாவை கொண்டாடிய கார்த்தி, காளிங்கராயன் கால்வாயில் முளைப்பாரியை விட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் பேசியதாவது:
பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் பயன்பாட்டில் உள்ள காளிங்கராயன் கால்வாயை மக்கள் அனைவரும் மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும். 738 வருடங்களுக்கு முன்பு தனி மனிதனாக காளிங்கராயன் கால்வாயை வெட்டினார். அப்படி அவர் செய்ததை சுயநலம் என்று யாரும் கூறிவிடக் கூடாது என்பதற்காக ஊரையே காலி செய்துவிட்டுச் சென்றது காளிங்கராயனின் குடும்பம். அவரது மனது யாருக்கு வரும்.
இந்த வாய்க்காலில் கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறைய பணம் சம்பாதித்து ஒன்றும் செய்யப்போவதில்லை. ஆரோக்கியம் தான் முக்கியம். அடுத்தவர்களின் ஆரோக்கியத்தை பாழடிப்பது அதைவிடக் கொடுமை.
விவசாயி என்றாலே வயதானவர்கள் என்ற நிலைமை உருவாகியுள்ளது. அப்படி இருக்கவே கூடாது. இனி விவசாயத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும். பெரியவர்கள் நம்மிடம் இந்த விவசாயத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.என் மகள் என்னுடன் இந்த கால்வாயில் முளைப்பாரியை விட்டார். அவளுக்கு இந்த வயதில் முளைப்பாரி என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் அவள் இன்று இந்த ஆற்றில் விளையாடியதை வாழ்க்கை முழுவதும் நினைவில் வைத்திருப்பாள். பொங்கல் பண்டிகைக் காலங்களில் நான் ஊருக்கு வருவதற்கு இதுபோன்ற பழக்கங்களை விட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தான். எவ்வளவு சம்பாதித்தாலும் விவசாயத்தை விட்டுவிடக் கூடாது. நான் சென்னைக்கு அருகிலேயே விவசாயம் செய்வதற்காக இடம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததும் நம் இளைஞர்கள் தான். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிக் கொண்டிருப்பதும் நம் கல்லூரி மாணவர்கள் தான். இன்றைய இளைஞர்கள் விவசாயத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்” இவ்வாறு கார்த்தி பேசினார்