காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக வாரியத்தை அமைக்கவும் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கானது வரும் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக வாரியத்தை அமைக்கவும் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழக - கர்நாடக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகளும் அதே போன்று சத்தியமங்கலத்திற்கு இயக்கப்படும் கர்நாடகா மாநில அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை.
தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லக் கூடிய அரசு பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் கர்நாடக அரசு பேருந்துகள் அத்திப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளது.