நீட் தேர்வு எழுத கேரளா வரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர்களுக்கு கேரளா, ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக மாணவர்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்கள் செல்லும் மாணவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் நுழைவு சீட்டைக் காட்டி ரூ.1000ஐ பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு 2ம் வகுப்பு ரயில் கட்டம் இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவிற்கு தேர்வு எழுதப் போகும் தமிழக மாணவர்களுக்கு பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் உதவி மையங்கள், தமிழக மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை அமைத்துத் தர கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.