இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் ஞாயிற்றுகிழமை கோயம்பேடு சந்தையை மூட முடிவெடுத்துள்ளனர் வியபாரிகள்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இரண்டாம் நிலையில் உள்ள கொரோனா பரவலை மூன்றாம் நிலைக்கு முன்னேறாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று மக்களுக்கு தொலைக்காட்சி மூலமாக நேரடியாக பேசிய பிரதமர் மோடி வருகின்ற 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். யாரும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றான சுய தனிமைப்படுத்திக் கொள்ளலை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய தருணம் இது என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பேச்சை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தரும் விதமாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட் செயல்படாது என கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.