கோவையில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தில் கோவை உதவி கமிஷனர் ஜெயராமன் ஒரு பெண் போலீஸ் அதிகாரி மீது பாலியல் ரீதியாகத் தொடுவது போன்ற வீடியோ காட்சி ஒன்று வெளியானது.
இந்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு பெரும் சர்ச்சையையும் காவல்துறையில் ஏற்படுத்தியதால் இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கோவை கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில் விசாரணைக்கு பின்னர் பெண் போலீஸ் மீது பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட கோவை ஏ.சி ஜெயராமனை கட்டாயக் காத்திருப்பில் வைக்க கோவை கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜெயராமன் அவர்கள் கூறியபோது, '"எந்தத் தவறும் செய்யாத என்னைக் குற்றவாளியைப் போல சித்திரிக்கிறார்கள். எனக்கும் பெண் பிள்ளை இருக்கு. ஒரு சாதாரண மனிதன்கூட அந்த இடத்தில் அப்படி நடந்துகொள்ள மாட்டான். அந்த வீடியோவைப் பார்த்ததும் நான் அதிர்ச்சியாகிவிட்டேன். என் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். வெறும் பரபரப்புக்காக என்னென்னமோ செய்கிறார்கள். என் பொண்ணு முகத்தில் எப்படி விழிப்பேன்? என்று கூறினார்.