கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்து உள்ளதை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் அதன் தீப்பிழம்புகள் அருகில் உள்ள பட்டாசு குடோனுக்கும் பரவியதால் பட்டாசுகளில் பற்றி பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த மூன்று வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டதாகவும் இந்த விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிருக்கு போராடி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து உயிர் பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் பட்டாசு குடோன் வைக்க அனுமதி அளித்தது எப்படி என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரண தொகையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.