அமித்ஷா வருகை தமிழகத்தில் பலருக்கு பயத்தை ஏற்படுத்தும் என முருகன் கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ளார் கே.எஸ்.அழகிரி.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து இது குறித்து ஆலோசனை செய்வதற்காக நவம்பர் 21 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பாஜக தமிழக தலைவர்களுடன் தேர்தல் குறித்து அமித்ஷா ஆலோசனை செய்வார் என தெரிகிறது.
இந்நிலையில் பாஜக தலைவர் எல்.முருகன், அமித்ஷாவின் வருகை குறித்து பேசினார். அப்போது அவர், அமித்ஷா வருகை தமிழகத்தில் பலருக்கு பயத்தை ஏற்படுத்தும். குறிப்பாக உத்தரப்பிரதேசம் சென்றார். அங்கு ஆட்சி ஏற்படுத்தினார். அதேபோல் அவர் செல்லும் மாநிலங்களில் பாஜக ஆட்சியை ஏற்படுத்துகிறார். எனவே அவர் தமிழகம் வருவது பாஜகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல பலருக்கு பயத்தை கொடுக்கிறது என பேட்டியளித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கே.எஸ்.அழகிரி தனது சமீபத்திய பேட்டியில், அமித்ஷா என்ன தீவிரவாதியா? எதிர்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்த. கையில் என்ன ஏ.கே.47வுடன் வருவாரா? ஜனநாயக நாட்டில் யாரை பார்த்தும் யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. தமிழ் மண்ணில் அமித்ஷாவை பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.