மஹாராஷ்டிராவில் பாஜகவின் ஃபட்நாவிஸ் ஆட்சி அமைத்தது ஒரு அவசர பொங்கல் என கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
மஹாராஷ்டிரா தேர்தலில் பாஜக-சிவசேனா வெற்றி பெற்றதை தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சியமப்பதற்கான இழுபறி நடந்து வந்தது. இதனை தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. மேலும் உத்தவ் தாக்கரே தான் முதல்வராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர ஃபட்நாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் ஆளுநர் பதவியெற்றி வைத்தார். அஜித் பவார் துணை முதல்வரானதை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஃபட்நாவிஸ் முதல்வரானது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது என பல அரசியல் தலைவர்கள் விமர்சனங்களை வைத்த வண்ணம் உள்ளனர். இவர்களை தொடர்ந்து தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி “மஹாராஷ்டிராவில் பாஜக அமைத்திருக்ககூடிய அரசு அவசர கால பொங்கல் தயாரிப்பது போன்றது” என விமர்சித்துள்ளார்.
முன்னதாக பாஜக பிற மாநிலங்களில் ஆட்சியமைத்தது குறித்தும் பல விமர்சனங்கள் எதிர்கட்சிகளிடம் எழுந்துள்ள நிலையில் தற்போது கே.எஸ்.அழகிரி இவ்வாறு விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.