இருட்டு அறையில் முரட்டுக்குத்து இயக்குனருக்கும், நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான இருட்டு அறை படத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்திருந்தார். இப்படம் ஒரு கலாச்சார சீரழிவு. இந்த இயக்குனரை படம் எடுக்கவே விடக்கூடாது என்கிற ரீதியில் பேட்டி கொடுத்தார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த இயக்குனர் சந்தோஷ் “என்னை திட்டுகிறீர்கள் சரி. காவல் நிலையங்களும், நீதிமன்றமும் இருக்கும் போது குடும்ப பிரச்சனைகளை நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்? இந்த அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது? இந்நிகழ்ச்சியை குழந்தைகளும் பார்ப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா?” என பதிலடி கொடுத்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஒரு வீடியோவில் பேசியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் “செக்ஸ் விழிப்புணர்வு தொடர்பாக நீங்கள் படம் எடுக்கவில்லை. அந்த படத்தில் முழுக்க வக்கிர புத்தியே காட்டப்பட்டுள்ளது. நீங்கள் என்னுடன் வாருங்கள். பெண்களை சந்திப்போம். நான் என்னுடைய நிகழ்ச்சிகள் சிலவற்றை ஒளிபரப்புகிறேன். நீங்கள் உங்கள் படத்தை திரையிடுங்கள். யாருக்கு அதிக மரியாதை கிடைக்கிறது எனப் பார்ப்போம். மக்கள் என்னை செருப்பால் அடித்தால் கூட நான் வாங்கிக் கொள்கிறேன். தமிழகத்தை விட்டே சென்று விடுகிறேன். என்னுடன் வர நீங்கள் தயாரா?” என சவால் விட்டுள்ளார்.