அமைச்சர் துரைக்கண்ணு இறப்பதற்கு 6 மாதத்துக்கு முன் குடும்பத்தினர் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்த துரைக்கண்ணு கடந்த அக்டோபர் 31 அன்று மூச்சு திணறல் மற்றும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது இழப்பிற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு தனது பினாமிகள் பெயரில் 2,500 கோடி சொத்து சேர்த்து வைத்திருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக பிரமுகர் ஒருவரே வருமான வரித்துறைக்கு கடந்த பிப்ரவரி மாதமே கடிதம் எழுதியதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து தற்போது இது குறித்து உளவுத்துறை நடத்திய விசாரணையில் அமைச்சர் துரைக்கண்ணு இறப்பதற்கு 6 மாதத்துக்கு முன் குடும்பத்தினர் பெயரில் 500 ஏக்கரில் தோப்புகள், நிலத்தை வாங்கி குவித்துள்ளதாகவும், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சொத்து வாங்கி குவித்துள்ளதாகவும், வெளிநாட்டிலும் நகைக்கடை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.