Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஜப்பான் ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட முன்னணி பரப்புரையாளர் மரணம்

ஜப்பான் ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட முன்னணி பரப்புரையாளர் மரணம்
, வியாழன், 28 அக்டோபர் 2021 (23:16 IST)
ஜப்பான் ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட முன்னணி பரப்புரையாளர் மரணம்

உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவரும் ஜப்பானில் அணு ஆயுதங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்டவருமான சுவானோ சுபோய் தமது 96-ஆம் வயதில் மரணமடைந்தார்.
 
1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி சுனாவோ சுபோய் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார். அன்றுதான் அமெரிக்கா ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசியது.
 
அந்த அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட சுனோவோ சுபோய், உடல் முழுவதும் தீக் காயங்களுடன் போராடினார்.
 
அணுகுண்டு தாக்குதலால் ஹிரோஷிமாவில் சுமார் 1,40,000 பேர் கொல்லப்பட்டனர். இந்த வலியை நேரில் கண்டும் அனுபவித்தும் உணர்ந்த சுபோய் அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான பரப்புரைக்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்தார்.
 
அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா ஹிரோஷிமா சென்றவுக்குச் சென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின்போது பராக் ஒபாமாவை சுபோய் சந்தித்தார்.
 
2016-இல் நடந்த இந்தச் சந்திப்பின்போது அவர்கள் கைகுலுக்கி ஒரு நிமிடம் பேசிக் கொண்டனர்.
 
இரண்டாம் உலகப் போரின் முடிவில் நேச நாடுகள் ஜப்பான் மீது அணுகுண்டுகளை வீசிய பிறகு, அமெரிக்க அதிபர் ஒருவர் ஹிரோஷிமாவுக்கு சென்றது அதுவே முதல் முறையாகும்
 
"எனது எண்ணங்களை அவரிடம் கூற முடிந்தது," அந்தச் சந்திப்புக்குப் பின் சுபோய் கூறினார். ஜப்பானின் அணுகுண்டு மற்றும் ஹைட்ரஜன் குண்டு தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களுக்கான தேசிய அமைப்பில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
 
ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சனிக்கிழமையன்று மரணமடைந்ததாக அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
 
அணுகுண்டு வெடித்த அன்று, பொறியியல் மாணவராக இருந்த சுபோய்க்கு 20 வயது.
 
"ஆகஸ்ட் 6 அன்று நிர்வாணமாக சுமார் மூன்று மணி நேரம் ஓட முயற்சித்தேன். ஆனால் இறுதியாக என்னால் நடக்கக்கூட முடியவில்லை" என்று அவர் ஏ.எஃப்.பி பேட்டி ஒன்றில் கூறினார்.
 
 
அணுகுண்டு பாதிப்பால் மயங்கிக் கொண்டிருந்த அவர், ஒரு கல்லை எடுத்து தரையில், "சுபோய் இங்கே இறக்கிறார்" என்று எழுதினார். ஆனால் அவர் இறக்கவில்லை. சில வாரங்களுக்குப் பிறகு கண்விழித்தார்.
 
அவர் மிகவும் பலவீனமாக இருந்தார். ஏராளமான காயத் தழும்புகள் உடலில் இருந்தன. தரையில் ஊர்ந்து சென்று பயிற்சி செய்வதன் மூலம் குணமடையத் தொடங்கியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார்.
 
பின்னர் ஜப்பானில் உள்ள பள்ளிகளில் கணிதம் கற்பித்தார். போரின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி இளைஞர்களிடம் கூறினார். மாணவர்கள் அவருக்கு "மிஸ்டர் பிகாடன்" என்று செல்லப்பெயர் சூட்டி அழைத்தனர். பிகாடன் என்றால் விண்ணில் பெருவெளிச்சத்துடன் கூடிய வெடிப்பு என்று பொருள். இதை அவர் ஹிரோஷிமா அமைதி ஊடக இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறினார்.
 
"ஒருபோதும் கைவிடாதே" என்பது அணு உலை எதிர்ப்புப் பரப்புரையில் ஈடுபடுவோருக்கு அவர் அளித்த அறிவுரை.
 
"நம் நோக்கத்திற்காக வாழ்ந்த ஒரு சிறந்த தலைவரின் மரணத்திற்கு நாம் இரங்கல் தெரிவிப்பது மட்டுமல்லாமல், அவரது பாதையில் நாம் தொடர்ந்து தடையின்றிப் பயணிக்க வேண்டு. அவரது சொற்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்" என அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச பரப்புரையின் அகிரா கவாசாகி கூறினார்.
 
அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான சுபோய்க்கு புற்றுநோய் உள்ளிட்ட பிற நோய்கள் ஏற்பட்டன. ரத்த சோகைக்காக மருத்துவமனையில் தனது காலத்தை கழித்தார்.
 
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய சுமார் 1,27,000 பேர் இன்னும் உயிருடன் உள்ளனர்.
 
சுனாவோ சுபோய்க்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல்காந்தியை விமர்சித்த பிரஷாந்த் கிஷோர்