சிவகங்கையில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்ட கவுன்சிலர் ஒருவர் அதில் பல்லி இறந்து கிடந்ததால் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் 14 வட்டாரங்களை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் சிறந்த ஊராட்சிகள் குறித்த பட்டய பயிற்சிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறந்த ஊராட்சி மன்றங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறாக சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர்கள் காலை அங்குள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்த உணவகம் ஒன்றில் உணவருந்தி உள்ளனர். அப்போது கவுன்சிலர் ஒருவர் தனக்கு வைக்கப்பட்ட சட்னியில் பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர்கள் உணவக ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் அந்த உணவை வாங்கி சென்று கொட்டி மறைத்ததுடன், கவுன்சிலரிடமும் சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் அவர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்த நிலையில் அவர்கள் வந்து உணவு மாதிரிகளை சேகரித்துள்ளனர்.
பின்னர் அங்கு வந்த போலீஸார் கவுன்சிலர்களை சமாதானப்படுத்தி அனுப்பியதோடு, உணவக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.