தமிழக அரசுப்பள்ளிகளில் அடுத்தாண்டு முதல் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்க இருப்பதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சமீபகாலமாக அரசுப்பள்ளிகளில் பல்வேறுப் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சீருடை மாற்றம், ஸ்மார்ட் கிளாஸ், பயோமெட்ரிக் அட்டண்டன்ஸ்,பேஸ் ரீடிங் அட்டண்டன்ஸ் போன்ற திட்டங்கள் சில உதாரணம்.
இந்த வரிசையில் அடுத்ததாக அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி வகுப்புகளை அடுத்த ஆண்டு முதல் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. நேற்று காஞ்சிபுரத்தில் ஆலய வழிபாட்டிற்கு சென்ற செங்கோட்டையன் பத்திரிக்கையாளர்களிடம் இந்த செய்தியை அறிவித்தார். மேலும் அவர் கூறியதாவது ‘வரும் ஜனவரி மாதம் முதல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த 14 வகை இலவச திட்டங்களை விரைவில் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.. தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு 11,17,000 சைக்கிள்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.’ எனத் தெரிவித்தார்