கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் மக்கள் பெரும் இடர்பாடுகளை சந்தித்து வரும் நிலையில் சென்னையில் முதலைகளுக்கு போதிய உணவு கிடைக்காத சூழல் எழுந்துள்ளது.
கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் முதலாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதால் பொருளாதார ரீதியாக பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை அருகே உள்ள முதலை பண்ணைக்கும் வருமானம் இல்லாததால் முதலைகள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை – மகாபலிபுரம் சாலையில் வடநெமிலியில் அமைந்துள்ளது மெட்ராஸ் க்ரொகடைல் பார்க். 1976ல் ரோமுலஸ் விட்டேகர் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த முதலைகள் பண்ணையில் தற்போது 2000 முதலைகள் இருக்கின்றன. சதுப்பு நில முதலைகள், நன்னீர் முதலைகள், கங்கை நதிகளில் காணப்படும் கூர்மூக்கு முதலைகள் என இங்கு ஏராள வகை முதலைகள் உள்ளதால் ஆண்டுதோறும் பல லட்சம் மக்கள் அவற்றை பார்க்க வருகை தருவர். முக்கியமாக ஏப்ரல், மே கோடை விடுமுறைகளில் பார்வையாளர்கள் அதிகம் வருவதால் முதலைகளுக்கான உணவு செலவுகளுக்கு பிரச்சினை இல்லாமல் இருந்து வந்துள்ளது.
தற்போது கடந்த மார்ச் மாதம் முதலாக முதலைகள் பண்ணை மூடப்பட்டுள்ள நிலையில் வருமானம் இல்லாததால் முதலைகளுக்கு உணவு அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முதலை பண்ணைக்கு நிதியுதவி செய்ய அரசு முன்வர வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.