கள்ளக்குறிச்சியில் பாமக சின்னமான அக்னி கலசம் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியின் மண்மலை பகுதியில் பாமக கொடிக்கம்பத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த சிங்கம் சிலையும், பாமகவின் அக்னி கலச சின்னத்தையும் மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்ளூர் பாமகவினர் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ட்விட்டர் மூலமாக கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “கொள்கை அடிப்படையில் பா.ம.க.வை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாத கோழைகள் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள். இதன்மூலம் பா.ம.க.வின் வளர்ச்சியை தடுக்க முடியாது. ஒரு கிராமத்தில் அக்னி கலச சின்னம் சேதப்படுத்தப்பட்டால் ஆயிரம் கிராமங்களில் அக்னி கலச சின்னம் பாட்டாளிகளால் அமைக்கப்படும்!” என்று கூறியுள்ளார்.
மேலும் “மண்மலை கிராமத்தில் பாட்டாளிகளின் அடையாளமான அக்னி கலசத்தையும், சிங்கச் சிலையையும் சேதப்படுத்திய கயவர்களை மன்னிக்கக் கூடாது. அவர்களை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்!” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.