கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து தொடர்ந்து பலர் விலகி வரும் நிலையில் சி.கே.குமரவேலு விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்நிலையில் ஒரு தொகுதியிலும் மநீம வெற்றி பெறாத நிலையில், கமல்ஹாசன் தனது சினிமா படப்பிடிப்புகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் மற்ற நிர்வாகிகள் ஆலோசனைகளை கமல் ஏற்கவில்லை என்றும், அனைத்திலும் தன்னிச்சையாகவே முடிவெடுத்தார் எனவும் பலர் குற்றச்சாட்டுகளை வைக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.
அந்த வகையில் முருகானந்தம், சந்தோஷ்பாபு, மகேந்திரன், பத்மப்ரியா உள்ளிட்டவர்களை தொடர்ந்து தற்போது சி.கே.குமரவேலும் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “தனிநபர் முடிவுகளுக்கு உட்பட்ட கட்சியில் இல்லாமல் ஜனநாயக தன்மை கொண்ட கட்சியில் இணைய விரும்புகிறேன். 233 தொகுதிகளிலும் தோற்றாலும் தன் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என கமல் நினைத்தார். தலைவருக்கான தகுதியை கமல் இழந்துவிட்டார்” என கூறியுள்ளார்.