சமூகநீதிக்கும் சாதிஆதிக்க வெறிக்கும் இடையிலான கரடுமுரடான முரண்களை விவரிக்கும் கலைச்சித்திரமே இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் #மாமன்னன்
உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இத்திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இப்படம் வெளியாகும் முன்பு பல சர்ச்சைகள் இருந்த நிலையில், நேற்று முன் தினம் ரிலீஸ் ஆன மாமன்னன் படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இப்படத்தைப் பார்த்த விசிக தலைவர் திருமாவளவன் தன் டுவிட்டர் பக்கத்தில்,
''சமூகநீதிக்கும் சாதிஆதிக்க வெறிக்கும் இடையிலான கரடுமுரடான முரண்களை விவரிக்கும் கலைச்சித்திரமே இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் #மாமன்னன். சாதி ஒரு கருத்தியலாக மட்டுமின்றி; அது ஒரு கலாச்சாரமாகவும் வலுவடைந்து கெட்டித்தட்டிக் இறுகிக் கிடக்கிறது. அதனைத் தகர்ப்பது என்பதைவிட; தளர்வுறச் செய்வதே ஒரு பெரும் போராகும். அப்போரினை குருதிக் களத்தில் விவரிப்பதே மாமன்னன்.
இறுதியில் சமூகநீதியே வெல்லும் என உரத்தும் பேசும் திரைஇலக்கியமே மாமன்னன்.
சபையின் நாயகமாக சமூகநீதியை அமர வைக்கும் அதிவீரனின் மாபெரும் வெற்றியே மாமன்னன். அன்பு இளவல்கள் மாரி செல்வராஜ், உதயநிதி ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். பாராட்டுகள்'' என்று தெரிவித்துள்ளார்.
மாமன்னன் படத்தின் வெற்றியை படக்குழுவினர் இன்று கேக் வெட்டி கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.