Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மரப்பாவை கூத்து என்கிற பொம்மலாட்டம் அழிவின் விளிம்பில் - வீடியோ

மரப்பாவை கூத்து என்கிற பொம்மலாட்டம் அழிவின் விளிம்பில் - வீடியோ
, செவ்வாய், 12 ஜூன் 2018 (12:03 IST)
மரப்பாவை கூத்து மனிதர்களின் வாழ்வில் ஒளியேற்றப்படுமா? சங்க கால இலக்கியம் முதல், சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மரப்பாவை கூத்து என்கின்ற பொம்மலாட்டம் அழிவின் விளம்பில் இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மொழிகளில் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய கலை பேணிகாக்கப்படுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

 
பொம்மலாட்டம் தமிழர்களின் மிகப் பழமையான மரபு வழிக் கலைகளில் ஒன்று. இது கலை தழுவிய கூத்து வகையைச் சேர்ந்தது. இது மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான கலை நிகழ்வு. 
 
மரப்பாவைக்கூத்து,  பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. தோல் பொம்மலாட்டம், மரப்பொம்மலாட்டம்  என இரண்டு வகையில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. இருப்பினும், உலகின் பல்வேறு இடங்களில் இக்கலை, மரபுவழிக் கலையாகத் திகழ்கிறது. இக்கலை, வட்டாரக்கலையோ, சடங்கியலாக நிகழ்த்தப்படும் கலையோ அல்ல. இது மரபுவழிக்கலை. பொம்மலாட்டக் கலையை நிகழ்த்துவோர் தற்போது  2 - 3 குடும்பங்கள் மட்டுமே. தோல் பாவைக் கூத்தை நிகழ்த்துவோர் மதுரை, கன்னியாகுமரி, கோவில்பட்டி, தேனி மாவட்டங்களிலும், சென்னை அருகிலும் மிகக்குறைவான அளவிலே வசிக்கிறார்கள்.
 
பொம்மலாட்டத்தில் இதிகாசம் மற்றும் புராணக் கதைகள், சரித்திரக் கதைகள் அதிகம் நிகழ்த்தப்படும். குறிப்பாகத் தமிழகத்தில், அருணகிரி நாதர் வரலாறு, சிறுத்தொண்ட நாயனார் கதை, சீதா கல்யாணம், பக்த பிரகலாதன், ஆண்டாள் கல்யாணம், அரிச்சந்திரன் கதை, வள்ளி திருமணம் ஆகியன நிகழ்த்தப்படுவதுண்டு. எந்தக் கதையை எடுத்தாண்டாலும் இடையில், கரகாட்டம், காவடியாட்டம், பேயாட்டம், பாம்பாட்டம் ஆகியவற்றில் ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்பது மரபு. திருமகள் பொம்மலாட்டம் நிகழ்த்தி அசுரர்களையும், பேய்க் கூட்டங்களையும் விரட்டினர் என்பது வாய்மொழியாக விளங்கும் புராணக்கதையாகும். 
 
தமிழ்நாட்டில் பொம்மலாட்டம்  என்றழைக்கப்படும் இந்தக் கலை,  ஆந்திராவில்  கொய்யா  பொம்மலாட்டா  எனவும்,  கர்நாடகத்தில் சூத்ரதா  கொம்பயேட்டா  எனவும்  ஒரிசாவில்  கோபலீலா  எனவும் மேற்கு வங்கத்தில் சுத்தோர்  புதூல்  எனவும்  அசாமில்  புதலா நாச் எனவும் ராஜஸ்தானில் காத்புட்லி எனவும் மகாராஷ்டிரத்தில் காலாசூத்ரிபஹுல்யா  எனவும் அழைக்கப்படுகின்றது.  ஆங்கிலத்தில் பொம்மலாட்டத்தை  மேரியோனெட்டு  (marionette) என்பர். 
ஆனால் இத்தகைய புகழ்பெற்ற பொம்மலாட்டத்தில் மரப்பாவை பொம்மலாட்டம் மிகவும் தத்துவங்களை கொண்டது என்றால் அது மிகையாகது. தற்போது தான் சினிமா, அப்போது நாடகம், அதற்கு முன்னாள் இந்த பொம்மலாட்டம் தான் மனித வாழ்வில் மிகச்சிறந்த பொழுது போக்கு ஆகும், ஆங்கிலேயர் காலத்தில், சுதந்திர இந்தியா, மலர இந்த பொம்மலாட்டம் மிகவும் முக்கிய பங்கேற்றது. ஆனால் தற்போது இந்த பொம்மலாட்டம் நிகழ்ச்சியினை பொதுமக்கள் புறக்கணித்து வருவதோடு, நாகரீகம் என்ற பெயரில் ஏதாவது விஷேசம் என்றால் 16 மி.மீட்டர் திரையரங்கம், ஆர்கேஷ்ட்ரா, நவீன க்ரோர்பதி, மியூசிக்கல் எண்டெர்டெயின்மெண்ட் ஆகியவற்றைகளைதான், மக்கள் தற்போது விரும்பி வருகின்றனர். 
 
ஆனால், கரூர் வாசிகள் தற்போது இந்த கலைக்கு உயிர்பிக்க, புதுவழிகளை கையாண்டு வருகின்றனர். கரூர் மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழாவில், இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சியினை நிகழ்த்தி பாரம்பரிய கலையினை மீண்டும் உயிர்பிக்க வழிவகை செய்துள்ளார்கள். 
 
அந்த பொம்மாட்டக்குழுவினர் ஒவ்வொரு மனிதர்களும் தங்களது வாழ்வில் நடைபெறும் சுபகாரியங்கள், திருவிழாக்கள் மற்றும் ஆலயங்களில் இந்து சமய அறநிலையத்துறையினரின் சார்பிலும் இது போன்ற பொம்மாட்டத்தை ஊக்குவித்தால், ஒலைச்சுவடிகளில் கூட முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொம்மலாட்டத்தினை ஊக்குவிக்க வேண்டுமென்றும் பொம்மலாட்டக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
-சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

18 ஆண்டுகளுக்கு முன் உடைந்த பனிக்கட்டியின் நிலை என்ன?