தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவை பாஜக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தொடர்ந்து கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜகவை உண்மையாக எதிர்ப்பது நாங்கள் தான் அதிமுக தரப்பு கூறியுள்ளது.
பாஜக மறைமுகமாக அதிமுக மூலம் தமிழகத்தில் காலூன்ற முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தது. அதிமுகவும் தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவுக்கு வளைந்து கொடுப்பதாக அரசியல் கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலை இன்று நடந்த கூட்டத்தில் வெளியிட்டனர். இந்த பட்டியலில் டாக்டர் நமது எம்ஜிஆர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜும் இடம் பெற்றார்.
இவர் பாஜகவை கடுமையாக எதிர்த்து கவிதை எழுதியதால் தினகரனால் நமது எம்ஜிஆர் பத்திரிகையிலிருந்து நீக்கப்பட்டவர். இவரை தற்போது எடப்பாடி தரப்பு தாங்கள் தொடங்க உள்ள நமது அம்மா பத்திரிகையின் ஆசிரியராகவும் நியமித்து, செய்தித் தொடர்பாளராகவும் நியமித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய மருது அழகுராஜ், எந்த பாஜகவை நான் எதிர்த்தேனோ அதற்காக என்னைத் தூக்கி எறிந்தார் தினகரன். ஆனால் இப்போது என்னை ஆளாக்கிய இயக்கம் எனக்கு இந்த பொறுப்பைக் கொடுத்திருக்கிறது. பத்திரிகைக்கும் ஆசிரியர் ஆக்கி, செய்தித் தொடர்பாளராகவும் என்னை ஆக்குகிறது என்றால் பாஜகவை உண்மையாக எதிர்ப்பது யார்? என சுட்டிக்காட்டியுள்ளார்.