பதவி ஆசை இல்லை என்று ரஜினிகாந்த் நல்லக்கண்ணுவை முதல்வராக்குவாரா என்று மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஜினியின் அரசியல் வருகை குறித்தும் அவரது ஆன்மீக அரசியல் குறித்தும் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ரஜினியின் அரசியல் வருகை குறித்து அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பாஜகவின் நெருக்கடியால் நடக்கிறது. பாஜக இந்துத்தூவாவை நிலை நிறுத்த முடியாத காரணத்தால் ரஜினி, கமல் போன்றவர்களின் முகமூடிகளை பயன்படுத்தி வாக்கு வங்கிகளை உருவாக்க நினைக்கிறார்கள்.
அதற்கான குறியீடுகளை ரஜினி தொடர்ச்சியாக வெளிக்காட்டுகிறார். முதலில் தன்னுடைய மேடையின் பின் திரையில் தாமரை முத்திரையின் கீழ் வெள்ளை தாமரை முத்திரையை காட்டினார். அதன் பிறகே ஆன்மீக அரசியல் என்று பேசுகிறார். ரஜினி ஒரு நடிகர் அவரை ரசிக்கலாம்.
ரசிகர்களை கொண்டு வந்து அரசியலில் நிறுத்தினால் அது எப்படி மக்களுக்கு பயன் அளிக்கும். எந்த அடிப்படையில் ரஜினி மக்களை அணுக நினைக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை. பாஜவின் பி டீம்தான் ரஜினி. பதவி ஆசை இல்லை என்று சொல்லும் ரஜினி நல்லக்கண்ணுவை முதல்வராக்குவாரா என்று திருமுருகன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.