மயிலாடுதுறையில் அதிகமான பயணிகளை வைத்து பேருந்தை இயக்க முடியாமல் அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையை சுற்றி பல்வேறு கிராமங்கள் உள்ள நிலையில் கிராம மக்கள் மயிலாடுதுறை வந்து செல்ல பெரிதும் பேருந்துகளையே நம்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் பள்ளி செல்லும் மாணவர்களும் பேருந்தில் பயணிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பல கிராமங்களுக்கு குறைவான அளவிலேயே பேருந்துகள் இயங்குவதால் மக்கள் ஒரே பேருந்தில் முண்டியடித்து ஏறி செல்லும் நிலையும் உள்ளது.
இந்நிலையில் வாதம்பட்டு பகுதியிலிருந்து மயிலாடுதுறைக்கு சென்ற அரசு பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலரும் கூட்ட நெரிசலாக பயணித்துள்ளனர். பலரும் படிகளில் தொங்கியபடி பயணித்த நிலையில் பேருந்து அதிக கூட்டத்தோடு இயக்க முடியாததால் நடு வழியில் பேருந்தை ஓட்டுனர் நிறுத்திவிட்டு இறங்கி சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.