திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று பெங்களூரு நோக்கி சென்றது. இந்த விமானத்தில் 167 பயணிகள் பயணித்த நிலையில், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள் இருவரும், திருச்சி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்தனர்.இதையடுத்து திருச்சி விமான நிலையம் நோக்கி வந்த விமானத்திலிருந்து, அவசரமாக தரையிறங்க விமானிகள் அனுமதி கோரினர்.
அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து 167 பயணிகளும் எவ்வித பாதிப்பு இன்றி பத்திரமாக தரையிறங்கினர். விமானத்தின் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விமானத்தை பழுது நீக்க தாமதம் ஏற்பட்டதால், பயணிகளை வேறு விமான மூலம் பெங்களூருக்கு அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டது.