புதுச்சேரியில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு கடந்த சில வாரங்களாக மெகா தடுப்பூசி மையங்களை அமைத்து வருகிறது என்பது தெரிந்ததே. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வந்த கடந்த வாரம் மெகா தடுப்பூசி மையம் சனிக்கிழமை நடந்தது.
இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார். அதன்படி 100-க்கும் மேற்பட்ட மையங்களில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
மேலும் வாகன வசதி இல்லாதோர் மற்றும் முதியோர்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழிசை கூறியதாவது, புதுச்சேரி மாநிலத்தை 100 சதவீத தடுப்பூசி பெற்ற மாநிலமாக உருவாக்க இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. மூன்றாவது அலை வருமா வராதா என்ற நிலையில் இரண்டாம் அலை இன்னும் முடிவு பெறவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுவதால் தடுப்பூசி ஒன்றே இதற்கு தீர்வாகும் என தெரிவித்துள்ளார்.