ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை பிறப்பித்ததில் உள்நோக்கம் உள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என நேற்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் ஸ்டெர்லைட் ஆலையை மூட அமைச்சரவையில் முடிவு எடுத்து அரசாணை பிறப்பிக்கவில்லை என்றும் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ஆலை மூடப்பட்டு கண்துடைப்பு நடத்தப்பட்டதை போல இப்பொழுதும் நடைபெறுகிறது என குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இன்று ஸ்டெர்லைட் ஆலை 2 வது யூனிட் விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட 342.22 ஏக்கர் நிலத்தை ரத்து செய்து தமிழக அரசு இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். ஒருவேளை இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்தால், தமிழக அரசு அதற்கு அனுமதி அளிக்காது என்றார். மேலும் ஸ்டாலின் தேவையில்லாமல் இந்த விஷயத்தில் குறை கூற வேண்டும் என்றே பேசுகிறார். அவர் எதிர் கட்சி அல்ல எதிரி கட்சி. குறை கூறுவதை விட ஆக்கப்பூர்வமாக செயல்பட ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும் என ஜெயக்குமார் ஸ்டாலினுக்கு பதிலடி தரும் விதமாக பேசினார்.