தமிழக அரசியலில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக முதல்வர் பதவியில் இருந்த அண்ணாத்துரை, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் திரையுலகில் இருந்தவர்கள் தான். அதற்கு பின்னர் பல நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் நுழைந்தபோது நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று எந்த கட்சியும் கூறவில்லை. ஆனால் விரைவில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவுள்ளதை அடுத்தே தற்போது நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பதில் தவறு கிடையாது, அரசியலுக்கு வந்த பிறகு மக்களிடம் அவர்கள் நடிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற கூட்டுறவுவாரவிழாவில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் நிலவும் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என அழகிரி கூறியிருப்பது குறித்து பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அரசியலுக்கு வந்தபிறகு மக்களிடம் நடித்ததில்லை எனவும் ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டார்.