தெர்மாக்கோல் திட்டத்தின் மூலம் மிகவும் பிரபலமான தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ தற்போது பேருந்து கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எந்த சம்பவமாக இருந்தாலும் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து மட்டும் வித்தியாசமாக இருக்கும் அதே நேரத்தில் சற்று நகைப்புக்குறியதாக இருக்கும். இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர் என கூறி கிச்சுகிச்சு மூட்டியுள்ளார்.
ஒரு ரூபாய் போட்டால் பிச்சைகாரர்கள்கூட வாங்க மறுக்கும் அளவுக்குத் தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதால் பேருந்து கட்டண உயர்வு என்றும் மக்களை பாதிக்காது என கூறி சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தினார் செல்லூர் ராஜூ.
இந்த பேருந்து கட்டண உயர்வு தமிழக மக்களை மிகவும் பாதித்துள்ளது. ஏனென்றால் இந்த உயர்வு மிக அதிகம், இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனை கண்டித்து மாணவர்களும், பொதுமக்களும் ஆங்காங்கே தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பேருந்து மறியல்கள் என கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது. சில இடங்களில் போராட்டம் செய்பவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளது. அனைத்து கட்சியினரும் இந்த பேருந்து கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நிலைமை இப்படி இருக்க, அமைச்சர் செல்லூர் ராஜூ ஏதோ செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர் போல, மக்களின் எண்ணம் என்னவென்று கூட தெரியாமல் பேருந்து கட்டண உயர்வை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.