ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு சென்ற ஒரு மணிநேரத்தில் ரித்திஷ் உயிரிழந்த சம்பவத்தை நம்ப முடியவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
நடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ்(46) திமுக சார்பில் 2009ல் ராமநாதபுரம் எம்.பியாக இருந்துள்ளார். திமுகவில் இருந்த அவர் 2014ல் அதிமுகவில் இணைந்தார். பல படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்தில் நடித்திருந்தார். திரைத்துறையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முக்கிய பதவி பகித்து வந்தார். தேர்தல் நெருங்குவதால் கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் அவர் ராமநாதபுரத்தில் உள்ள தனது வீட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு விருந்து சாப்பாடு போட்டு அவர்களுடன் சாப்பிட்டுவிட்டு அவர்களை வழியனுப்பி வைத்தார். பின்னர் ஓய்வெடுத்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது இந்த திடீர் மறைவுக்கு திரைத்துரையினர் உள்பட பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், ரித்திஷ் வீட்டில் விருந்து சாப்பிட்டுவிட்டு திருப்புவனம் அருகே சென்று கொண்டிருந்தேன். அப்போது ரித்திஷ் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. ஒரு மணிநேரம் கூட ஆகல. என்னால் துக்கத்தை தாங்க முடியவில்லை என கூறியபடியே கண்கலங்கி நின்றார்.