திமுக தலைவராக அழகிரி விரைவில் பொறுப்பேர்பார் என அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் ஜெயக்குமார் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு, நான் திருப்பரங்குன்றம் பகுதியில் பிரசாரம் செய்தேன். அதே பகுதியில்தான் ஸ்டாலினும், பிரசாரம் செய்தார். அப்போது அங்கு 'சென்று வா மகனே சென்று வா' என்ற பாடல் பாடியது.
அது கோவலன் கதைப்பாடல். கோவலன் சென்ற பிறகு திரும்பி வரவே இல்லை. ஸ்டாலின் கதையும் இதேதான். இனி அவர் திரும்பி வரவே முடியாது. தற்போது நடைபெறும் தேர்தலில் திமுக தோல்வி அடையும் பட்சத்தில், திமுக தலைவராக மு.க.அழகிரி பதவி ஏற்பார் என அமைச்சர் ஜெயகுமார் பேசியது கடும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.