தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் குறித்து அரசு சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார்.
தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த அதிகனமழையால் மக்கள் குடியிருப்புகள் வெள்ளக்காடாக மாறின. பல இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி உடைப்பு ஏற்பட்டுள்ளது. பாலங்கள் உடைந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென் மாவட்டங்களில் நேரில் சென்று நிலவரத்தை பார்வையிட்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளும் திமுக அரசு மழை வெள்ளம் குறித்து சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும், தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருக்கும்போது இந்தியா கூட்டணி சந்திப்புக்காக டெல்லி சென்று விட்டதாகவும் விமர்சித்து பேசியிருந்தார்.
தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள நிவாரண பணிகள் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதில் அளித்தபோது எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு குறித்தும் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் “யார் சொன்னது? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என கூறினாரே.. அவரா?” என்று கேள்வி எழுப்பிவிட்டு சென்று விட்டார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகளுக்கு இடையேயான வார்த்தை மோதல் வலுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.