அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று துணை அதிபராக பதவியேற்கவுள்ள தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபராக போட்டியிட்டு வென்றுள்ளார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ். தமிழகத்தில் மன்னார்குடியில் உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த கோபாலனின் மகள் வழி பேத்திதான் இந்த கமலா ஹாரிஸ்.
கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டும் என துளசேந்திரபுரம் கிராம மக்கள் பூஜைகள் செய்த நிலையில், அவர் ஒருமுறை சொந்த கிராமத்திற்கு வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில் துணை அதிபராக பதவியேற்கவுள்ள கமலா ஹாரிஸுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அவர் கைப்பட எழுதியுள்ள அந்த கடிதத்தில் அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்பதன் மூலம் ஒரு தமிழ் பெண் அமெரிக்காவையும் ஆள தகுதி படைத்தவர் என்பதை நிரூபித்துள்ளதாக வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும் இருவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் இயற்கை வழங்கிய இணையற்ற தமிழ்மொழியில் இந்த கடிதத்தை எழுதுவதாகவும், தங்கள் வருகையை எதிர்நோக்கி தமிழகம் காத்திருக்கிறது என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.