தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகரான சென்னை ஒருபக்கம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் மறுபுறம் டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் வேளாண் நிலங்கள் மழையில் மூழ்கி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்டா மாவட்ட விவசாய பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர் பெரியசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையால் பயிர்கள் மூழ்கியுள்ள நிலையில் அவற்றைக் காக்கவும்; நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்திடவும்; சேதம் குறித்து அறிக்கை அளித்திடவும் மாண்புமிகு அமைச்சர் பெரியசாமி தலைமையில் ஆறு அமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “நொடியும் துஞ்சாது அமைச்சர்களும் அதிகாரிகளும் அரசுத்துறை ஊழியர்களும் அவர்களோடு நானும் இந்நெருக்கடியில் உங்களுடன் தொடர்ந்து களத்தில் நிற்கிறோம்; விழிப்புடன் அரண் அமைத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.