22 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு குறைந்தது ஐந்து தொகுதிகளிலாவது வெற்றி கிடைக்க வேண்டும். இல்லையேல் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும். அதேபோல் திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 22ல் 19 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இவை இரண்டும் நடக்கவில்லை என்றால் மீண்டும் பொதுத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது
இந்த நிலையில் ஆட்சியை காப்பாற்ற திடீரென தினகரன் ஆதரவு மூன்று எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது. 3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்துவிட்டால் மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றாலே அதிமுக அரசு பிழைத்துவிடும். இதுதான் அதிமுகவின் திட்டமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பீதியில் அதிமுக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், அதிமுக ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துவிட வேண்டும் என பிரதமரும் ஆளுநரும் செயல்படுவதாகவும், 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். மேலும் தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில் 3பேர் மீது நடவடிக்கை எடுப்பது கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.