பல்லடம் தாலுக்கா நியூஸ் 7 செய்தியாளர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதற்கு பத்திரிகையாளர் சங்கம், அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நியூஸ் 7 செய்தி தொலைக்காட்சியில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக கடந்த ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் நேச பிரபு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் தொடர்பான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் காமநாயக்கன்பாளையம் பகுதியில் தனது வீட்டிலிருந்த நேசபிரபுவை நேற்று பிற்பகல் முதலே பதிவெண் இல்லாத இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து நேசபிரபு காவல்துறையினருக்கு தனது செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க தவறியுள்ளனர். இந்த சூழலில் இரவு 9 மணியளவில் செய்தியாளர் நேசபிரபு வீட்டிலிருந்து வெளியே வந்த நேரம் பார்த்து அவரை கண்காணித்து விரட்டிய ஆறு பேர் கொண்ட கும்பல் , அங்குள்ள பெட்ரோல் பங்கில் வைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த நேசபிரபு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பியோடிய கும்பலை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் எனவும் முன்கூட்டியே தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த காவல்துறைக்கு சக பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பத்திரிகையாளர் சங்கமும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியதற்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ம் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்
மேலும் செய்தியாளருக்கு உயர்தர மருத்துவச் சிகிக்சை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் புகார் பெறப்பட்டும் உடனடி நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சரை ஓ பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.