1998 ஆம் ஆண்டே மேட்டுப்பாளையம் சுற்றுச்சுவர் குறித்து புகார் அளித்துள்ளோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்தரசன் கூறியுள்ளார்.
மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் 20 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசின் அலட்சியத்தினால் தான் இச்சம்பவ நடந்துள்ளதாக பலர் கூறிவருகின்றனர்.
இதனிடையே சம்பவ இடத்தை பார்வையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அக்குடும்பங்களுக்கு நிவாரணமாக 10 லட்சம் பணமும், அரசு வேலை, புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என கூறினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “சுற்றுசுவர் குறித்து கடந்த 1998 ஆம் ஆண்டே கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.” என கூறியுள்ளார்.
மேலும் ”மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்திடம் கடந்த ஆண்டு அப்பகுதி மக்களும் புகார் அளித்துள்ளனர். ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆதலால் தான் இதனை நாங்கள் விபத்து இல்லை என்கிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.