காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் கேபிகே ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாகக் காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் கேபிகே ஜெயக்குமார். இவர் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார். இதனிடையே ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாகக் காணவில்லை என அவரைய மகன் கருத்தையா ஜாப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், கடந்த 2ம் தேதி இரவு 7.5 மணிக்கு வீட்டில் இருந்து தனது தந்தை ஜெயக்குமார் வெளியில் சென்ற நிலையில் 2 நாட்களாகியும், இன்னும் வீடு திரும்பவில்லை. காணாமல் போன தனது தந்தையை கண்டுபித்து தருமாரு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லையில் மாயமான காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். உபரி அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் இருந்த அவரது உடலை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக நெல்லை எஸ்பி தெரிவித்துள்ளார்.
மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.