நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிபிசிஐடி எஸ்பி முத்தரசி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஜெயக்குமார் மர்ம மரணம் வழக்கு தொடர்பாக வழக்கை விசாரித்த அதிகாரிகளிடம் பெறப்பட்ட தகவல் மற்றும் கிடைக்கப் பெற்ற தடயங்கள் உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த சனிக்கிழமை சிபிசிஐடி ஏடிஎஸ்பி சங்கர் தலைமையிலான அதிகாரிகள், ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் தனித்தனியாக சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். குறிப்பாக, ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பு வீட்டில் அவரது நடவடிக்கைகள் எப்படி இருந்தது என்பது குறித்தும், ஜெயக்குமார் மரணத்தில் குடும்பத்தினர் மீது எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்தும் போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயக்குமார் எழுதியதாக வெளியான கடிதங்களில் இடம்பெற்றிருக்கும் நபர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.