ஆடி அமாவாசை முன்னிட்டு நெல்லையில் இருந்து காசி திருவேணி சங்கமம், ஹரித்துவார், ரிஷிகேஷ், அலகாபாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சிறப்பு ரயில் விடப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ரயில் நெல்லையில் இருந்து கிளம்பி மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக காசி திரிவேணி சங்கமம், அலகாபாத், ஹரித்துவார், ரிஷிகேஷ் ஆகிய பகுதிகளுக்கு செல்லும்.
இந்த சுற்றுலா ரயில் ஆகஸ்ட் 7-ம் நெல்லையில் இருந்து கிளம்பி 12 நாட்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் கட்டணம் 21,800 முதல் 39,100 ரூபாய் வரை ஒரு நபருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
750 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த ரயிலில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அந்தந்த ஊரில் உள்ள முக்கிய தலங்களுக்கு சென்று வருவதற்கான போக்குவரத்து வசதி, உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.