நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட உள்ளாட்சி தேர்தலை தமிழக தேர்தல் ஆணையம் நவம்பரில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 5 வருடங்களுக்கு ஒருமுறை உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். கடந்த உள்ளாட்சி தேர்தல் காலம் 2016ம் ஆண்டில் முடிவடைந்தது. அடுத்த உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருந்த சூழலில் அதில் வகுப்புவாரியான இட ஒதுக்கீடு சரியான முறையில் வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது.
இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்தது. அப்போது முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்டதால் ஏற்பட்ட அரசியல் குளறுபடிகளால் உள்ளாட்சி தேர்தல் குறித்து கடந்த 3 வருடங்களாக பேச்சே இல்லாமல் இருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் முடிந்துள்ளதால் நவம்பரில் தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
இதற்கு தேவையான மின்னனு வாக்கு எந்திரங்கள் தமிழகத்திடம் போதுமான அளவு இல்லாததால் அண்டை மாநிலங்களில் இருந்து வாங்க உள்ளனர். நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளுக்கு மின்னனு முறையிலும், கிராம, பஞ்சாயத்துகளுக்கு வாக்கு சீட்டு முறையிலும் தேர்தலை நடத்தலாம் என தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது என தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தேர்தல் பணிகளில் வெளிமாநில IAS அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுமா அல்லது 2,3 கட்ட தேர்தலாக நடத்தலாமா என்பது குறித்து தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.