நிர்மலா தேவி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிர்மலா தேவி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக பேராசிரியை நிர்மலா தேவி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
இதனை அடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் நிர்மலா தேவி ஆஜராகாததால் தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 29ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகிளா நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாலியல் தேவைகளுக்கு வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இவ்வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி, துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.