மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் இல்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளாக திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதில், தேமுதிகவை தங்களது பக்கம் இழுக்க அதிமுகவும் பாஜகவும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
அதிமுக, தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக கடந்த வாரம் தொடங்கியது. அதிமுக கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் தேமுதிக கேட்டதாக கூறப்பட்டது.
ஆனால், தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் தேமுதிகவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக இருக்கிறார்.
ஆனால் அதிமுக மாநிலங்களவை சீட்டை தேமுதிகவுக்கு தர மறுத்து வருகிறது. இதன் எதிரொலியாக அதிமுகவுடன் 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக, மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இதுவரை நேரம் ஒதுக்கவில்லை.
அதிமுகவை கழற்றிவிட்டு பாஜகவுடன் இன்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தேமுதிக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பிரேமலதாவை பாஜக மேலிட பொறுப்பாளர்கள் சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. இதனை தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் இல்லை என்றும் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக பாஜகவுக்கு நேரம் ஒதுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.